“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா?
உங்கள் பெயர் குலம் கோத்திரம் சொல்லுங்கோ என்று சிவாச்சாரியார் கேட்டவுடன் தான் சிலருக்கு ஒன்றிரண்டு டக்குனு நியாபகம் வராது. சிலர் மிகச் சரியாக உடனே சொல்லிடுவாங்க. இன்னும் சிலர், இதை அச்சடித்து தங்கள் கைப்பையிலேயே வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ, நம் பெயரைச் சொல்வதை விட, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சிறந்தது என்று முடிவுக்கு வந்து, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள் என்கின்றனர்.
அர்ச்சனை என்பது யாது?
மனிதர்களுக்குப் பல குறைகள் உண்டு. பல குறிக்கோள்களும் உண்டு. இவற்றையெல்லாம் அடைவதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். ஆகவே, இறைவனிடம் அந்த எண்ணங்களைச் சொல்லி அதை நிறைவேற்றுமாறு விண்ணப்பம் செய்து கொள்வதே அர்ச்சனையாகும். அப்படியானால், இறைவனிடம் யாருக்கு இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறோம் என்று சொல்ல வேண்டாமா? அதற்க்குத் தான் நம் பெயர், குலம் மற்றும் கோத்திரம். ஒவ்வொருவரையும் குறிப்பாக அடையாளப்படுத்துமாறு (Personal Identity) இருப்பது இந்த மூன்றும் தான். தங்களுடைய பெயரோடு ஊரையும் சேர்த்து சொல்வது மரபாக இருந்து வந்தது. இன்றும் பலர் தங்கள் பெயரோடு ஊரையும் சேர்த்துச் சொல்கின்றனர். அப்படி நம்மை அடையாளம் காட்டுவதற்கான பெயர், குலம் மற்றும் கோத்திரம் சொல்லி, இந்த விண்ணப்பத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நாம் இறைவனிடம் சொல்ல வேண்டும். நமக்கு மந்திரங்கள் தெரியாத காரணத்தினாலே, அந்த அர்ச்சகர் நமக்காக நம் பொருட்டு அந்த மந்திரங்களைச் சொல்லி சமர்ப்பிக்கிறார்.
இன்று தமிழில் அர்ச்சனை செய்யலாம். முறையாக பார்த்தால், நமக்கு நாமே தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஒரு ஆள் வைத்து செய்கிறோம், தவறில்லை. நாமே செய்வது சிறப்பு. அர்ச்சனை என்பது பாட்டேயாகும் என்பதை சுந்தரர் பெருமான் வரலாற்றில் உணர்த்துவதாக சேக்கிழார் மொழிகிறார். இறைவனைப் போற்றிப் பாடிவிட்டு நம் விண்ணப்பங்களையும் அதோடு சேர்த்து சொல்லுகிறோம். இதுவே அர்ச்சனையாகும்.
குறைகளும் குறிக்கோளும் உள்ள நாம் இறைவனிடம் விண்ணப்பம் செய்து அர்ச்சனை செய்கிறோம். இறைவன் பெயருக்கே அர்ச்சனை செய்வது என்றால் என்ன? இறைவன் தனக்கு என்று எந்த தேவையும் இல்லாதவன். அவனும் யாரிடமும் போய் எதையும் கேட்கும் அவசியமும் இல்லை. அப்படி என்றால், இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது அர்த்தமற்றதாகும். நம்முடைய பெயைரை இறைவன் திருமுன் சொல்லி அவனைப் போற்றி, நம்முடைய விண்ணப்பங்களையும் அவனிடம் வைப்பதே அர்ச்சனையாகும். ஆகவே, அர்ச்சனை நம் பெயரைச் சொல்லியே செய்ய வேண்டும்.
இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கும் போது நமக்கு சரி என்று தோன்றுவதைக் கேட்கிறோம். நம் ஆசைகளைச் சொல்கிறோம். ஆனால், நிஜ உலகில், அதுவே நமக்கு வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து தந்துவிடும். ஆகவே, நமக்கு என்ன சரியாக வேண்டும் என்பது பெரும்பாலும் நமக்கே தெரிவதில்லை. நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட முக்காலமும் முழுவதும் அறிந்த இறைவனுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதும், நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும், நன்றாகவே தெரியும். ஆகவே, எனக்கு வேண்டியதை நீயே அறிவாய், அதை எனக்கு கொடுக்க விருப்பம் இருந்தால் அதைக் கொடுப்பா என்று இறைவனிடம் புத்திசாலிகள் வேண்டுவர். இதுவே ஒரு பாடலாக திருவாசகத்தில் இருக்கிறது.
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
இறைவா, எனக்கு என்ன கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை நீயே அறிவாய். அப்படி நீ எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால், உன் விருப்பப்படியே அதை கொடுப்பா என்று கேட்பது மிகவும் கெட்டிக்காரத்தனம். இதனால் தான், கோவிலுக்குச் செல்லும் பெரியோர்கள், தனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்பதில்லை. உனக்கா ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் கொடுப்பா என்று இறைவனைப் போற்றிப் பாடி மட்டும் வந்துவிடுவார்கள். எனவே, கோவிலுக்குச் சென்று நமக்காக விண்ணப்பம் வைக்கும் போது நம் பெயர் சொல்லியே அர்ச்சனை செய்ய வேண்டும். அதைவிட சிறப்பு, இந்த திருவாசக பாடலை மனனம் செய்து பாடிவிட்டு வருவது மிகவும் சிறப்பாகும்.
இறைவன் திருநாமம் சொல்லி எப்போது அர்ச்சனை செய்யப்படும் ?
பண்டிகை காலங்களிலும், திருவிழா காலங்களிலும், விஷேட நாட்களிலும் இறைவனுடைய திருநாமத்தைக் கூறி அர்ச்சகர்கள் அருச்சனை செய்வார்கள். உதாரணமாக, சுவாமி திருக்கல்யாணம், நன்நீராட்டு, பிரம்மோத்சவம் போன்ற காலங்களில் சுவாமி பெயரைச் சொல்லியே சங்கற்பம் செய்யப்படும்.
அர்ச்சனை சங்கல்பம் என்பதே, வேண்டுதல் உறுதிமொழி விண்ணப்பம் தான். விண்ணப்பத்தில் சுவாமி பெயரா? நம் பெயரா? இரண்டு பெயர்களுமே சொல்லி செய்யலாம். அது தவறல்ல. ஆனால்! நம் பெயரை எப்போது சொல்வது! சுவாமி பெயரை எப்போது சொல்வது என தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக முருகனுக்கு அர்ச்சனை செய்கிறீர்கள் என கொள்வோம். உங்கள் பிறந்தநாள்; உங்கள் திருமணநாள்; உங்கள் பரீட்சை நாள்களில் உங்கள் பெயர் கூறி சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். கிருத்திகை, ஷஷ்டி, விசாகம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களில் (நமது பெயர்களை க்கூறாமல்) அங்கு முருகன் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதுதான் சரியான வழியாகும்.
திருச்சிற்றம்பலம்.