தமிழ் அன்னையைக் காப்போம் – கோமல் கா சேகர் No ratings yet.

தமிழ் அன்னையைக் காப்போம். கோமல் கா சேகர்:
ஓம்
சிவ சிவ :


தமிழ் அன்னையைக் காப்போம் !


அன்பர்கள் இந்தப் பதிவினை முழுவதும்
படிக்க வேண்டுகிறேன்.
சிவமே படைத்து மதுரையில் சங்கத் தலைவராகவும் அமர்ந்து புலவர் குழாத்துக்குப் போதித்தப் பெருமை உடையது நம் தாய் மொழி !
நுணுகி ஆய்ந்தால் இறைவனாரைத் தவிர எவரும் இந்தச் சீர் மிகு மந்திர ஆற்றல் உடைய மொழியைப் படைத்திருக்க முடியாது என்றக் கருத்தே எஞ்சும் ! தமிழன் என்ற நம் பண்பாட்டையும் , நாகரீக வாழ்வையும் காக்க ஆதாரம் நம் தாய் நமக்கு ஊட்டி வளர்த்த நம் தமிழன்னையே !
இப்படியே விட்டால் 20 ஆண்டுகளில் 50 சதவீதம் வரை பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு மொழியாகி நம் அழிவுக்கு ஏதுவாகி விடும் ! இது சிவத் துரோகமாகிவிடும் !
தமிழையே அறியாத நம் வழிமுறையினருக்கு எப்படி நம் திருமுறைகளையும் சங்க காலம் தொடங்கி நம் பெருமைகளைப் பறை சாற்றும் நூல்களையும் கற்பிக்க முடியும் ? நம் சிவ மொழிக்கும், சைவத்துக்கும் ஏதாவது செய்தேன் என்ற மன நிறைவு அடைய விழைவோர் ,இதனைப் படி எடுத்து ,தம் கருத்துக்ளையும் தனித் தாளில் பதிவு செய்து முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன் !
தனி நபராக நான் மட்டும் முயன்றால் பயன் கிடைக்காது என்பதை கருத்தில் கொள்க ! பங்காற்றுவோர் சிவத்தின் அருளுக்கு ஆளாவர் !

ஓம்

சிவ சிவ :


தமிழக முதல்வர் அவர்களுக்குத் தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என எழுதியத் திறந்த மடல்.


அனுப்புபவர் :

கோமல் கா. சேகர்.

103 , பெருமாள் கோயில் வீதி ,கோமல் அஞ்சல். ~609805 ,

நாகப்பட்டினம் மாவட்டம்./9791232555.

பெறுநர்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , தமிழ்நாடு அரசு ,கோட்டை , சென்னை.

நாள்:18-11-2018

~~~~~~~~~~

ஐயா ,

பொருள் : தமிழ் மொழி – ஆங்கில மொழியால் 35 சதம் வரைக் கலப்படம் ஆகியுள்ள இழி நிலை – உடன் மீட்டெடுக்க வேண்டிய நிலை – கருத்துரு சமர்ப்பித்தல்- தொடர்பாக .

பார்வை : தமிழக முதல்வருக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட 27-01-2010– நாளிட்ட அறிக்கை.

பார்வையில் கண்ட எனது கடிதத்தில் தமிழ் மொழியினை , 35 சத வீதம் வரை ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசும் அளவுக்கு மக்கள் தள்ளப் பட்டு விட்ட அவல நிலையைச் சுட்டி , இந்த அவல நிலையிலிருந்து , தமிழை மீட்டெடுக்க ,அரசுத் தரப்பிலிருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பித்து இருந்தேன்.

ஆனால் எந்த விதப் பயனுள்ள நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப் படவில்லை !

இந்த நிலைக்கு எவர் காரணம் என்பதையெல்லாம் ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவல்ல !

என்ன காரணம் என்பதை மட்டும் ஆய்ந்து , குறைகளைக் களைந்து தனித் தமிழை மீண்டும் நிலை நிறுத்துவதே தமிழர்களாகிய நம் கடமையாகும் .

தமிழை மீட்டெடுத்துத் தூய்மை செய்யும் அதிகாரம் முழுதும் இறைவன் திருவருளால் ,

தங்கள் கைகளில் இன்று குவிந்திருக்கிறது !

அதனால் அரசுக்கு தனி நிதிச் சுமையின்றி பல நற் பயன் விளைவிக்கும் சட்டங்களை இயற்ற எனது இந்த விரிவான அறிக்கையை தங்கள் கவனத்துக்குச் சமர்ப்பிக்கிறேன்.

இயற்ற வேண்டிய சட்டங்கள் !

01) தமிழ்நாடு தொலைக் காட்சி தமிழ் பயன் பாட்டுச் சட்டம் .

இன்று தொலைக் காட்சிகள் கிட்டத்தட்ட 90 சத வீத மக்களைச் சென்றடைகிறன.

அனைத்து வகை நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களும்,

35 சதம் வரை ஆங்கில மொழியைக் கலந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்கிறார்கள் என்பதை தமிழுலகம் அறியும்.

இதனால் கிராமப் புற மக்கள் வரை ,தாம் பேசுவதில் உள்ளப் பல சொற்கள் ஆங்கிலமா என்று கூட அறியாமல் கலப்பு மொழியில் பேசும் இழி நிலை உருவாகி விட்டது.

இன்று ஆண் பெண் இரு பாலருக்கும் ,

ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசினால்தான் சமூகத்தில் மரியாதை என்ற ஒரு தவறான எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளதும் இதன் விளைவே ஆகும்.

ஆகவே தனித் தமிழைப் பயன் படுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏதுவாக உரிய சட்டத்தினை உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும்.

இதனால் மக்கள் தொலைக் காட்சியைப் பார்க்க மாட்டோம் என்று நிறுத்தி விடப் போவதில்லை !

எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

செய்தி ஒலியை எழுத்து வடிவில் ,தொடராகக் கீழே எழுதும் போது நிறைய எழுத்துப் பிழைகளும் ,

இலக்கணப் பிழைகளும் மலிந்துள்ளன.

செய்திகளைப் படிப்போரும் ஒருமை ,பன்மை முதலான இலக்கணப் பிழைகளைகளையும் செய்கிறார்கள்.

இதனைத் தவிர்க்க , தமிழை முதன்மைப் பாடமாகப் பயின்றோரையே ,செய்தித் தயாரிப்பாளராகவும் ,படிப்போராகவும் ஒவ்வொரு தொலைக் காட்சியிலும் நியமனம் செய்ய வகை செய்ய வேண்டும். தனித் தமிழில் இயக்கப் படும் மக்கள் தொலைக் காட்சியைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

02) தமிழ்நாடு திரைப் படத்துறை தமிழ் பயன் பாட்டுச் சட்டம் ‌.

கிட்டத்தட்ட 1970 வரை

தமிழ்த் திரைப் படங்கள் தூயத் தமிழ் சொற் பதங்களைப் பயன் படுத்தியே தயாரிக்கப் பட்டன.

இதனால் தமிழ் நாட்டில் ஆங்காங்கே வழங்கி வந்த கொச்சைத் தமிழ் பேச்சு வழக்கம் பெருமளவு நீங்கி ,பேச்சு வழக்கில் தமிழகம் முழுதும் சம நிலை ஏற்பட்டது. இது தூயத் தமிழுக்கு ஏற்றம் தந்து பேருதவியாகவும் அமைந்தது !

இன்று பெருமளவு ஆங்கிலக் கலப்பும் ,கொச்சைத் தமிழ் உரையாடல்களுமே திரைப் படத்தில் துறையினரால் வலிந்துப் புகுத்தப்பட்டு ,இம் முறையானது பயன்பாட்டுக்கு வந்து ,தமிழ் சீரழிக்கப் பட்டு வருகிறது.

ஆகவே இந்த இழி நிலையை அறவே போக்க உரிய சட்டம் இயற்றப் பட வேண்டும்

முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு ,திரு . எம்‌ ஜி.ஆர் , செல்வி. ஜெயலலிதா ,மற்றும்சிவாஜி , ஜெமினி ,எஸ் எஸ் இராஜேந்திரன் ,

திருமதி கண்ணாம்பாள்

திருமதி விஜயகுமாரி , திருமதி பத்மினி,சாவித்திரி

போன்றோர் பேசியத் தூயத் தமிழ் வசனங்கள் இன்றும் மக்களால் விரும்பப் படுகின்றன என்பதையும் அறிவீர்கள் !

தூய தமிழை மட்டும் பயன்படுத்தி திரைப் படங்கள் எடுத்தால் ,திரைப் படமே பார்க்க மாட்டேன் என எவரும் தவிர்க்கவும் போவதில்லை!

ஆகவே தக்கவாறு ஆய்வு செய்து தூய்மையான தமிழ் உரையாடல்களைப் பயன் படுத்தியே ,திரைப் படங்கள் எடுக்க ஏதுவாகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

03) நாளிதழ் ,வார ,மாத இதழ்கள் தமிழ் பயன்பாட்டுச் சட்டம்.

இன்று

நாளிதழ்களிலும் , வார ,மாத இதழ்களிலும் ,

விளம்பரங்களிலும் , மிகவும் அதிக அளவு ஆங்கில மொழிக் கலப்பு இருப்பதையும் ,

இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதையும் ,கருத்தில் கொண்டு,தூய தமிழில் அவை வெளியிடப் பட வகை செய்திட உரிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

06) தமிழ் மொழிப் பட்ட வகுப்புப் படித்து , இன்று ஆயிரக் கணக்கானவர்கள் , அரசு மற்றும் தனியார் பணிகளின்றி உள்ளனர்.

தமிழக அரசுப் பணிகளான இள நிலை உதவியாளர் , உதவியாளர் பணியிடங்களுக்கு இவர்கள் தேர்வு செய்யப் பட ஏதுவாக உடனடியாக 50 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்க வேண்டும் !

எவ்விதத் தகுதியும் நோக்காமல் ,இப் பதவிகள் இவர்கள் எய்தியுள்ளத் தகுதிக்குக் குறைவான தகுதித் தேவை உடையனவாக இருப்பதால் முதுமை அடிப்படையில் உடன் நியமன ஆணைகள் வழங்க வேண்டும்.

07) பல அச்சகங்களில் அச்சிடப்படும் சிறு அறிவிப்புகள் , விளம்பரங்கள்

,பத்திரிகைகளில் எண்ணற்றப் பிழைகள் மலிந்துள்ளன !

அரசுத் துறை ,தனியார் துறை சார்ந்த வெளியீடுகளிலும் பிழைகள் மலிந்துள்ளன ! தனியார் வர்த்தக நிறுவன விளம்பரப் பலகைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன.

வட்ட அளவில் தமிழாசிரியர் குழுமம் அமைத்து உரிய கட்டணம் பெற்று பிழை நீக்கித்தான் வெளியீடுகள் செய்யப் பட வேண்டும் என்று கட்டுப் படுத்தலாம் !

இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ஊதியம் வழங்கலாம்.

அரசாணை , அறிவிப்பு இதர வெளியீடுகளில் பிழைகள் தவிர்க்க வட்டாட்சியர் ,

கோட்டாட்சியர் முதலான அலுவலகங்களுக்கு ஒவ்வொரு தமிழ்ப் புலவரை நியமனம் செய்யலாம் .

08) இன்று தனித் தமிழ் இளங்கலை ,முது கலைப் பாடத்திட்டங்கள் முழுமையான தமிழ் வல்லுனாராக்கும் வகையில் இல்லை !

வேலை வாய்ப்பின்மையைக் கருதி ,அதிக மதிப்பெண்கள் பெறும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் ,வேறு உயர் கல்விப் பட்டங்களைப் பெற முனைவதால் ,

குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களே தமிழ் இளங்கலை முதுகலை வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள் !

வேலை வாய்ப்பின்மையே முதன்மைக் காரணம்.

1100 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் தமிழ் படிக்க முன் வருவதில்லை .

மேல் நிலைக் கல்வி முடிந்த உடனேயே பேராசிரியர் ,மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ,உயர் நிலைப் பள்ளிப் பணிகளுக்கு

மதிப்பெண் அடிப்படையில் , இவர்கள் படித்து வெளி வரும்போது ஏற்பட உள்ள பணியிடங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்து, ஒருங்கிணைந்த எட்டாண்டு தமிழ்க் கல்வி பாடத் திட்டம் அமைத்து ,முழுப்

புலவராக்கி முனைவர் பட்டத்துடன் வெளிவரும்படி பயிற்றுவிக்க , முயற்சி மேற்கொண்டால் , மீண்டும்

நுண்மாண் நுழைபுலம் மிக்கப் புலவர்கள் தமிழகத்துக்குச் சொத்தாகக்

கிடைப்பார்கள்.

வேலை உறுதி இருந்தால் 95 சத வீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் ஆற்றல் மிக்க மாணவர்கள் விரும்பிக் தமிழ் படிக்க முன் வருவர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குழு அமைத்து இந்த இனம் ஆய்வு செய்யப் பட வேண்டும்.

09) இன்றைய நிலையில் இரண்டு தலைமுறை மாணவர்கள் , தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவோ ,

படிக்கவோ ,தனித்

தமிழில் பேசவோ இயலா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் !

முற்றிலும் முதல் வகுப்பிலிருந்து 12- ஆம் வகுப்பு வரையாது , கட்டாயத் தமிழ் வழி பயின்று முறையே இந்தச் சீர்கேட்டினை அகற்ற வல்லதாகும்.

இன்று ஆங்கில வழிப் பயிற்றுப் பள்ளிகளை மக்கள் நாடும் ஒரே காரணம் ,மேல் நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் போது தம் பிள்ளைகள் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் பேசவும் ,எழுதவும் வல்லவனாக வேண்டும் என்பது ஒன்றே அன்றி வேறு காரணம் எதுவும் இல்லை.

உயர் நிலைத் தொழிற் கல்வி பயின்ற மாணவர்களில் தங்கு தடையின்றி ஆங்கிலத்தைப் பேசும் மாணவர்களே பணிகளுக்கு விரும்பித் தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப் படுவதே , இதன் அடிப்படை .

பள்ளி இறுதி வகுப்பு நிறைவு செய்யும் 12 ஆண்டு காலத்துக்குள் மாணவர்களை ஒரு மொழியில் நன்கு பேசவும் ,எழுதவும் தயார் செய்ய முடியாது என்பது ஏற்புடையதன்று !

ஆங்கிலப் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துப் பேச்சுப் பயிற்சிக்கு தேவையான அளவு கால ஒதுக்கீடு செய்து பயிற்சி கொடுத்தால் இந்தக் குறைபாடு தீர்ந்துவிடும் !

மக்கள் தனியார் பள்ளிகளை நாடும் தேவையும் குறையும் .

இந்த கருத்துருவை ஆழ்ந்து ஆய்வு செய்யின் தமிழும் ஏற்றம் பெறும் ‌; ஆங்கிலத் தேவையும் மக்களுக்கு நிறைவேறும் !

அரசன் இறைவனால் நியமிக்கப் படுகிறான் ; முன்னைத் தவமின்றி ஒருவர் உயர் பதவியை எய்த முடியாது!

வரலாற்றிலேயே இல்லா அளவுக்கு ,இற்றை நாளில் நம் உயிரினும் மேலானத் தாய் மொழி கீழ்படுத்தப் பட்டுள்ளது.

இப்போதே முயன்றாலும் , இந்தச் சீர்குலைவில் இருந்து மீண்டும் தமிழ் தன் இயல்பு நிலையை அடைய முப்பது ஆண்டுகளாவது ஆகும்.

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இறைவனாரால் குவித்து வைக்கப் பட்டுள்ளது.

இந

்தத் திட்டங்களைச் செயல் படுத்துவதால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

மாறாக மக்களுக்குப் பெரும் பயன்களே விளையும் .

இறைவனாரால் சங்கத் தலைமை தாங்கி வளர்த்தெடுக்கப் பட்டது நம் தமிழ் மொழி !

இதனை மீட்டெடுக்கும் செயல் திட்டங்களைத் தாங்கள் தக்க ஆணைகளிட்டுச் செயலாக்கத்துக்குக் கொண்டு வந்தால் ,2000 ஆண்டு கால தமிழக வரலாற்றில் தங்கள் பெயர் பொன்

எழுத்துக்களால் பொறிக்கப் பெறும்.

“தமிழ்த் தாயை மீட்டெடுத்தத் தலைவன்” என்ற அழியாப் புகழுக்கு ஆளாவீர்கள்.

தங்கள் ஆட்சியும் புகழுக்குரியதாகும்‌ .

ஆகவே தமிழ் மற்றும் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஒரு வரலாற்றில் போற்றத்தக்க நல்ல முடிவை எடுத்து செயலாக்கம் செய்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள ,

( கோமல் கா சேகர்/ 18.11. 2018)

இணைப்பு:

தமிழக அரசுக்கு அனுப்பிய எனது 27-01-2010 நாளிட்டக் கடித நகல் :

நகல்கள் : —

01)மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்.

02) மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர்./03)பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

04)கல்வித் துறைச் செயலர் ,சென்னை. 05)இயக்குநர் ,தமிழ் வளர்ச்சித்துறை சென்னை,

06) துணை வேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தஞ்சாவூர்

07) தமிழ்த் துறைத் தலைவர்கள் ,

அனைத்துப் பல் கலைக் கழகங்கள்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *