தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ். 5/5 (2)

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்

இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி.

இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் எத்தனை ஆங்கில வார்த்தைகள் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். 30-40 சதவிகிதத்திற்ககு மேல் தமிழ் வருகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு முறை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்து பாருங்கள். இன்னும் 10 சதவிகிதம் மட்டுமே முன்னேறும். பல வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்றே தெரியாமல் திணறுவீர்கள்.

நாம் தமிழர், நான் திராவிடன், தமிழ் தொன்மையான மொழி, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றெல்லாம் வீர வசனம் பேசும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம் இது. கடந்த பல பத்தாண்டுகளில், எத்தனை அரசியல் கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து விட்டன ? தமிழை வைத்து சம்பாதித்து விட்டன ? அவையெல்லாம் நம் தாய் மொழி தமிழை வளர்க்க ஏதாவது ஒரு சிறு துரும்பாவது முயற்சி செய்தனவா ? ஆங்கில கலப்பை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்தனவா ?

அடுத்த தலைமுறை அல்லது உங்கள் குழந்தைகளின் பேச்சை இதே பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் முடிவு இன்னும் அபாயகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க என்ன சிரத்தை எடுத்தீர்கள் ? உங்களின் அடுத்த தலைமுறைக்கு எத்தனை தமிழ் போதிக்கப்படுகிறது. தமிழைத் துறந்து பிற முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என்று மருத்துவர், பொறியாளர் என்று படிக்க வைத்தவர்கள் எல்லாம் இன்று மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்க்கு வேலை செய்யும் நிலை. பொறியாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.

இன்னொரு பக்கம் தமிழில் பேசுவதை இழிவாகத் தானே கருதுவது. உலகிலேயே யாருக்குமே இல்லாத வியாதி இது. உலகில் இருக்கும் அனைவரும் தங்கள் மொழியில் பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மட்டும் இதற்குப் புறம்பாக இருக்கிறது. நம் தாழ்வு மனப்பான்மையை நன்றாகத் தூண்டி விட்டு, அதை பயன்படுத்திய பல காலம் அந்நிய ஆட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நம்மை சீரழித்த அந்நிய ஆட்சியின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. முக்கியமாக நம் இளைய தலைமுறையினருக்கு, வெளிநாடு படங்கள், கதை புத்தகங்கள் சிறந்தவை என்றும் நம் நாட்டு பொருட்கள் உப்பில்லாதவை என்று தவறான கண்ணோட்டம் புகுத்தப்படுகிறது. வியாபார நோக்கத்திற்க்காக நம் ஆட்களே இதற்குத் துணை போகிறார்கள். ஆகவே, இளைஞர்கள், தவறான பாதையிலேயே வளர்ந்து நம் சமுதாயத்தைச் சீரழிக்கின்றனர். வயது வந்து முதிர்வு வந்த பின்னர், தமிழில் பேச முயன்றாலும் முடியாத இழிவான நிலை. கேவலம்.

உலகிலேயே உயர்ந்த நூல்கள் இருப்பது தமிழில் தான். நான்கு வேதங்கள் இருந்தது தமிழில் தான். எண்ணற்ற நுண்ணிய அறிவுப் புதையல்கள் இருப்பது தமிழில் தான். இயல் இசை நாடகம் என்று பிரிவுகளில் தமிழ் வளர்ந்தது இங்கே தான். சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தது உலகிலேயே இங்கு தான். எத்தனை எத்தனை அரிய நூல்கள் ? இத்தனை நூல்கள் இருந்தும், நம் இளையவர்கள் சேக்ஸ்பியர் நாவல் பற்றி பெருமையாக பேசுவது எத்தனை இழிவான நிலை ? கொடுமை. தமிழின் வளர்ச்சிக்கு எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்யும் மன்னர்கள் துணை நின்றார்கள். ஆனால், சனநாயக ஆட்சியிலோ, தங்கள் அரியணையைத் தக்க வைப்பதிலேயே மன்னர்கள் காலம் போக்குகிறார்கள். அப்படி நல்ல நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இதைப் பற்றி எதுவும் செய்வதில்லை.

தெய்வம் பேசிய தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம். அப்படி தெய்வம் தமிழில் என்ன பேசியது என்று என்றைக்காவது கேட்டதுண்டா ? அலட்சியமே நம்மை அழிக்கும் முதல் எதிரி.

ஆங்கில கலப்பை நீக்கிப் பேச நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் ? நம் மன்னர்களாகிய அமைச்சர்கள் என்ன முயற்சி செய்யப்போகிறார்கள் ? பேசுவதில் பலனில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலக் கலப்பு நீக்கி பேச முயற்சி செய்ய வேண்டும். பல ஆங்கில வார்தைதகளுக்குத் தமிழ் வார்த்தைகள் தேட வேண்டும். அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். பழக பழக சில மாதங்களில் ஆங்கிலம் நீக்கி கட்டாயமாக நாம் பேச இயலும். சித்தரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும், அலுவலகத்திலும், நட்பு வட்டங்களிலும், உறவு வட்டங்களிலும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மறவாமல் நல்ல தமிழ் பேச எழுத பயிற்சி கொடுங்கள். நீங்கள் வீட்டில் அவர்களோடு நல்ல தமிழில் பேசினாலே, அது அவர்களுக்குச் சிறந்த பயிற்சி. அதை விட வேறு பயிற்சி தேவையில்லை.

இதோ அபாய எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *