சென்னையில் ஒரு கிரிவலம் 4.75/5 (4)

சென்னையில் ஒரு கிரிவலம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழ் வழக்கு. ஆற்றல் உள்ள மலைகளை சிவமாகவே வணங்கி வலம் வருவதும் நம் மரபு. அவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மலைகளை சிவமாக வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு மலை சென்னை மாநகரிலும் உள்ளது.

சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை. இந்த மலையின் மீது பன்நெடுங்காலமாக சிவபெருமான் இலிங்க வடிவாய் எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார். நிறைய பக்தர்கள் இம்மலை மீது இருக்கும் சிவபெருமானைத் தரிசித்து அபிஷேக வழிபாடு செய்து வருகிறார்கள். இம்மலை மீது கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் முழுமதி/நிறைமதி/பௌர்ணமி தினத்தன்று மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு உள்ள இந்த மலையை ஒரு முறை வலம் செய்ய 1 மணி நேரம் 15 நிமிடங்களும் ஆகிறது. மலை மீது ஏற சுமார் 20-30 நிமிடமும், இறங்க சுமார் 15-20 நிமிடங்களும் ஆகிறது.

நீங்களும் முழுநிலவு நாளில் இந்த மலையை மலைவலம் (கிரிவலம்) வந்து பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானின் தரிசனத்தைக் கண்டு அவனருள் பெற வாருங்கள்.

ஒரு பெரும் குழு தற்போது ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் மலைவலம் செல்கிறது. இந்த குழுவோடு இணைந்து நீங்களும் மலைவலம் செல்ல நீங்கள் அரசன்கழனி கல்யாண பசுபதீசுவரர் கோவிலுக்கு சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடவும்.

கோவிலை அடையும் வழி

மேடவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 51B பேரூந்து சைதாப்பேட்டை, மேடவாக்கத்திலிருந்து அரசன்கழனி நிறுத்தத்தில் நிற்கும். இறங்க வேண்டிய இடம் அரசன்கழனி பஸ்டாப். தாம்பரத்திலிருந்து 51K பேரூந்து இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

ஒவ்வொரு முழுமதி அன்றும் வாருங்கள்.

அரசன்கழனி பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடம் – இதை சுட்டவும்

மேலும் தகவல்களுக்கு: +91-8122299938, +91-9382664059 அழைக்கவும்.

 

 

 

 

 

 

Please rate this

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ். 5/5 (2)

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்

இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி.

இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் எத்தனை ஆங்கில வார்த்தைகள் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். 30-40 சதவிகிதத்திற்ககு மேல் தமிழ் வருகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு முறை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்து பாருங்கள். இன்னும் 10 சதவிகிதம் மட்டுமே முன்னேறும். பல வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்றே தெரியாமல் திணறுவீர்கள்.

நாம் தமிழர், நான் திராவிடன், தமிழ் தொன்மையான மொழி, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றெல்லாம் வீர வசனம் பேசும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம் இது. கடந்த பல பத்தாண்டுகளில், எத்தனை அரசியல் கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து விட்டன ? தமிழை வைத்து சம்பாதித்து விட்டன ? அவையெல்லாம் நம் தாய் மொழி தமிழை வளர்க்க ஏதாவது ஒரு சிறு துரும்பாவது முயற்சி செய்தனவா ? ஆங்கில கலப்பை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்தனவா ?

அடுத்த தலைமுறை அல்லது உங்கள் குழந்தைகளின் பேச்சை இதே பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் முடிவு இன்னும் அபாயகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க என்ன சிரத்தை எடுத்தீர்கள் ? உங்களின் அடுத்த தலைமுறைக்கு எத்தனை தமிழ் போதிக்கப்படுகிறது. தமிழைத் துறந்து பிற முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என்று மருத்துவர், பொறியாளர் என்று படிக்க வைத்தவர்கள் எல்லாம் இன்று மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்க்கு வேலை செய்யும் நிலை. பொறியாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.

இன்னொரு பக்கம் தமிழில் பேசுவதை இழிவாகத் தானே கருதுவது. உலகிலேயே யாருக்குமே இல்லாத வியாதி இது. உலகில் இருக்கும் அனைவரும் தங்கள் மொழியில் பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மட்டும் இதற்குப் புறம்பாக இருக்கிறது. நம் தாழ்வு மனப்பான்மையை நன்றாகத் தூண்டி விட்டு, அதை பயன்படுத்திய பல காலம் அந்நிய ஆட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நம்மை சீரழித்த அந்நிய ஆட்சியின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. முக்கியமாக நம் இளைய தலைமுறையினருக்கு, வெளிநாடு படங்கள், கதை புத்தகங்கள் சிறந்தவை என்றும் நம் நாட்டு பொருட்கள் உப்பில்லாதவை என்று தவறான கண்ணோட்டம் புகுத்தப்படுகிறது. வியாபார நோக்கத்திற்க்காக நம் ஆட்களே இதற்குத் துணை போகிறார்கள். ஆகவே, இளைஞர்கள், தவறான பாதையிலேயே வளர்ந்து நம் சமுதாயத்தைச் சீரழிக்கின்றனர். வயது வந்து முதிர்வு வந்த பின்னர், தமிழில் பேச முயன்றாலும் முடியாத இழிவான நிலை. கேவலம்.

உலகிலேயே உயர்ந்த நூல்கள் இருப்பது தமிழில் தான். நான்கு வேதங்கள் இருந்தது தமிழில் தான். எண்ணற்ற நுண்ணிய அறிவுப் புதையல்கள் இருப்பது தமிழில் தான். இயல் இசை நாடகம் என்று பிரிவுகளில் தமிழ் வளர்ந்தது இங்கே தான். சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தது உலகிலேயே இங்கு தான். எத்தனை எத்தனை அரிய நூல்கள் ? இத்தனை நூல்கள் இருந்தும், நம் இளையவர்கள் சேக்ஸ்பியர் நாவல் பற்றி பெருமையாக பேசுவது எத்தனை இழிவான நிலை ? கொடுமை. தமிழின் வளர்ச்சிக்கு எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்யும் மன்னர்கள் துணை நின்றார்கள். ஆனால், சனநாயக ஆட்சியிலோ, தங்கள் அரியணையைத் தக்க வைப்பதிலேயே மன்னர்கள் காலம் போக்குகிறார்கள். அப்படி நல்ல நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இதைப் பற்றி எதுவும் செய்வதில்லை.

தெய்வம் பேசிய தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம். அப்படி தெய்வம் தமிழில் என்ன பேசியது என்று என்றைக்காவது கேட்டதுண்டா ? அலட்சியமே நம்மை அழிக்கும் முதல் எதிரி.

ஆங்கில கலப்பை நீக்கிப் பேச நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் ? நம் மன்னர்களாகிய அமைச்சர்கள் என்ன முயற்சி செய்யப்போகிறார்கள் ? பேசுவதில் பலனில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலக் கலப்பு நீக்கி பேச முயற்சி செய்ய வேண்டும். பல ஆங்கில வார்தைதகளுக்குத் தமிழ் வார்த்தைகள் தேட வேண்டும். அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். பழக பழக சில மாதங்களில் ஆங்கிலம் நீக்கி கட்டாயமாக நாம் பேச இயலும். சித்தரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும், அலுவலகத்திலும், நட்பு வட்டங்களிலும், உறவு வட்டங்களிலும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மறவாமல் நல்ல தமிழ் பேச எழுத பயிற்சி கொடுங்கள். நீங்கள் வீட்டில் அவர்களோடு நல்ல தமிழில் பேசினாலே, அது அவர்களுக்குச் சிறந்த பயிற்சி. அதை விட வேறு பயிற்சி தேவையில்லை.

இதோ அபாய எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Please rate this

உங்கள் சிவ நிகழ்ச்சிகளை இங்கே பதிவிட No ratings yet.

உங்கள் சிவ நிகழ்வுகளை இங்கே பதிவிடுங்கள்.

உங்கள் திருக்கூட்டத்தின் இனி வரும் நிகழ்வுகளை எனக்கு வாட்சேப்பிலோ மின்னஞ்சலிலோ அனுப்பி வைத்தால் நம் saivasamayam.in வலைதளத்தில் வெளியிடுவோம். தொடர்ந்து உங்கள் நிகழ்வுகளை அனுப்ப, மின்னஞ்சல்: saivasamayam.in@gmail.com

அழைப்பிதழ் இருப்பின் இணைத்து அனுப்பவும்.

உங்கள் நிகழ்வுகளை saivasamayam.in வலைதளத்தில் வெளியிட கீழ்கண்ட தகவல்களை நிரப்பி அனுப்பவும்:

திருக்கூட்டம் (அ) நிர்வாகத்தின் பெயர்:

நிகழ்ச்சி பெயர்:

எங்கு ?

எப்போது ?

அமைப்பாளர்:

தொடர்பு எண்:

தங்கும் வசதி:

வழித்தடம்:

பிற தகவல்கள் ஏதேனும்:

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 4.33/5 (6)

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 – 2019

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அயல் நாடுகளிலும் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் ஏன் சேர வேண்டும் ? இந்த வகுப்பு நமக்கு என்ன நன்மை தரும் ? இந்தப் பயிற்சியில் யார் சேரலாம் ? பயிற்சி காலம், பயிற்சி கட்டணம், தேர்வு மற்றும் சான்றிதழ் பற்றிய மேலும் பல செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள அறிக்கையைப் படிக்கவும்.

அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள மையங்களுக்கு சென்று இன்றே உங்கள் பெயரைப் பதிவிடுங்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

வகுப்பு நடைபெறும் அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மதுரை சித்திரைத் திருவிழா No ratings yet.

மதுரை சித்திரைத் திருவிழா

        உ
சிவமயம்

மதுரை சித்திரை திருவிழா 2018

18/04/18 புதன்கிழமை
மீனாட்சி அம்மன் கோவில் கொடி ஏற்றம்.
கற்பகவிருட்ஷ சிம்ம வாகனம்

19/04/18 வியாழக்கிழமை
பூத அன்ன வாகனம்

20/04/18 வெள்ளிக்கிழமை
கயிலாச பர்வதம் –
காமதேணு வாகனம்

21/04/18 சனிக்கிழமை
தங்க பல்லாக்கு

22/04/18 ஞாயிற்றுக்கிழமை
வேடர் பரி லீலை

23/04/18 திங்கட்கிழமை
சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை –
ரிஷப வாகனம்

24/04/18 செவ்வாய்க்கிழமை
நந்திகேஷ்வரர் –
யாழி வாகனம்

25/04/18 புதன்கிழமை
பட்டாபிஷேகம் –
வெள்ளி சிம்ம வாகனம்

26/04/18 வியாழக்கிழமை
திக்விஜயம் –
இந்திர விமான உலா

27/04/18 வெள்ளிக்கிழமை
காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மாலை பூ (புஷ்ப) பல்லாக்கு

28/04/18 சனிக்கிழமை
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உலா

வாருங்கள். சிவனை நினைந்திருங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சென்னை புத்தகத் திருவிழா 2018 தற்போது நடைபெறுகிறது 10-22 No ratings yet.

சென்னை புத்தகத் திருவிழா 2018 இப்போது நடைபெற்று வருகிறது.

41 ஆவது புத்தகத் திருவிழா சென்னை புனித ஜார்ஜ் ஆங்லோ இண்டியன் மேல் நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) தற்போது நடைபெற்று வருகிறது. சனவரி 10 முதல் 22 ஆம் தேதி வரை.

இரண்டாம் நாளான இன்று (11-01-2018, வியாழக்கிழமை), தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை கோசை நகரான் குழுவினரின் கயிலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

எல்லா வகையான புத்தகங்களும் இந்த புத்தக கடலில் இருக்கிறது. அள்ளுபவர்கள் வந்து அள்ளுங்கள். குறிப்பாக, சைவ சமய நூல்கள் எண்ணற்றவை உள்ளன. குறிப்பான சில பதிப்பகங்களில் நம் சைவ சமய நூல்கள் கிடைக்கின்றன. சித்தர திருவிளையாடல், சித்திர பெரியபுராணம் புத்தகங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பதிப்பகத்திலும், அதை அடுத்து உள்ள கிரி டிரேடர்ஸ் கடைகளிலும் கிடைக்கிறது. உமா பதிப்பகம், சைவ சிந்தாந்த நூற்புக்கழகம், கிரி டிரேடர்ஸ், மணிவாசகர் பத போன்றவை சில. சைவ சமய புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் கீழே புகைப்படங்களில் கடை எண்ணோடு பதிவிடப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் விருப்பம் போல வாங்கி அள்ளி எடுத்துச் சென்று படித்து பயன்பெறுங்கள்.  எல்லா கடைகளிலும் 10%. சாரதா பதிப்பகம் 50%.

வலைதளம்: https://bapasi.com/

 

Please rate this

16 ஆவது சிவபூசை மாநாடு தமிழகச் சைவநெறிக் கழகம் No ratings yet.

தமிழகச் சைவ நெறிக் கழகத்தின் 16 ஆவது ஆண்டு மாபெரும் சிவபூசை மாநாடு

இடம்: சென்னை பள்ளிக்கரணை, எஸ். எஸ். மகால் திருமண மண்டபம்.

நாள்: சனவரி 27 மற்றும் 28

தீக்கை பெற்ற சிவனடியார்கள் செய்யும் சிவபூசையைக் காணுங்கள்.

புதிய நூல்கள் வெளியீடு

சொற்பொழிவுகள்

28 ஞாயிறு காலை 7:00 மணிக்கு திருமுறைகள், சாத்திரங்கள் உடன், 108 அடியார்கள் சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, கோலாட்டத்துடன் சிவனடியார்கள் புடைசூழ மாபெரும் சைவ எழுச்சி வீதி உலா நடைபெறும்.

தமிழகம் எங்குமிருந்து சிவனடியார்கள், சிவதொண்டர்கள், சிவநேசர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், சைவ பெருமக்கள் வருக தர இருக்கிறார்கள்.

அனைவரும் வருக வருக !!!

நிகழ்வுகள்:

அழைப்பிதழ்:

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

 

Please rate this

இறைவன் யார் ? நாம் யாரை வழிபட வேண்டும் ? 4.38/5 (8)

திருச்சிற்றம்பலம்.

 

இறைவன் யார் ? நாம் யாரை வழிபாடு செய்யவேண்டும் ?

சமூக ஊடகங்களில் திகழும் பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியும், உள்ளதை உள்ளவாறு தெளிவுபடுத்தவும் முயலும் பதிவு இது.

ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் பாதமலரை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாதமலர்களை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

மெய்கண்ட சாத்திரங்கள் கொடுத்தருளிய மெய்கண்டார் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

நாம் யார், இறைவன் யார், நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, நாம் யாரை வணங்க வேண்டும் என்பதை தெளிவுற அறிவதற்கு முன்னர், சில வார்த்தைகளை தெளிவு பெற அறிந்து கொள்வது அவசியம்.

 

வணங்குதல் என்றால் என்ன ?

வணக்கம் என்ற சொல் தமிழில் பல பொருளைத் தரும் சொல்லாக விளங்குகிறது. பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றார் போல் அது வேறு வேறு பொருளைத் தரும். இது வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் என்று பல்வேறு பொருளைத் தருகிறது. ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வரும் போது, அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அது அவரை வரவேற்பதற்கு. இங்கு வணக்கம் வரவேற்பைக் குறிக்கிறது. ஒருவர் வீட்டில் விருந்து சாப்பிட்டு கிளம்பும் போது வணக்கம் சொல்கிறோம். அது நன்றியைத் தெரிவிக்கிறது. கோவிலில் கடவுளை வணங்குகிறோம். அது தொழுதலைக் குறிக்கிது. தெருவில் செல்லும் போது நண்பரைப் பார்க்கும் போது வணக்கம் சொல்கிறோம். அது வாழ்த்துதலைக் குறிக்கிறது. ஆகவே, வணங்குகிறோம் என்ற சொல் எந்த இடத்தில் எந்த அர்த்தம் கொடுக்கிறது என்பதை தெளிவாக உணர வேண்டும்.

 

வழிபாடு செய்தல் என்றால் என்ன ?

வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதாகும். இறைவனைப் பூசிப்பதாகும். இறைவனை எப்படித் தொழ வேண்டும் என்றும் திருக்கோவில் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் நம் ஆகமங்கங்கள் உரைக்கின்றன. இறைவனை வழிபடுவதற்குப் பல்வேறு நியம நியதிகள் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு குலத்தினர் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள். வழிபாடு இறைவனுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. செய்யப்பட வேண்டும்.

 

இறைவன் எத்தனை பேர் ? யாரெல்லாம் அவர்கள் ?

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் தெளிவாக விளக்குகிறது. அவன் பாலுக்கு அப்பாற்பட்டவனாதலால், அவனைப் பரம்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஓர் உருவும், ஓர் நாமம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் பல்வேறு பெயர்களையும் உருவங்களையும் நாமே கொடுத்து வழிபடுகிறோம். பொதுவான அந்த பரம்பொருளை நாம் சிவபெருமான் என்ற பெயரைக் கொடுத்து நாம் மனதில் எண்ணுவதற்கு எளிதாக அதற்கு ஒரு இயல்பான உருவத்தையும் கொடுத்துக் கொண்டுள்ளோம். உருவமில்லாத அந்த பரம்பொருள் உயிர்களுக்கு உதவுவதற்கு வேண்டி, உயிர்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு உருவத்தைத் தானே எடுத்து தன்னை உயிர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறது. பிறப்பு இறப்பு இல்லாத அந்த பரம்பொருள் எல்லையற்ற சக்தியைக் கொண்டது. அந்த சக்தியைக் கொண்டு தான் பல்வேறு செயல்களைச் செய்கிறது. நாம் எளிதாக புரிவதற்கு வேண்டி, அந்த சக்திக்கு மனித பெண் உருவம் கொடுத்து பார்வதி, மீனாட்சி, காமாட்சி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் சூட்டி மகிழ்ந்து கொள்கிறோம். சில காரணங்களுக்காக சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்ட சக்தியை விநாயகர் என்றும், முருகப் பெருமான் என்றும், இவர்கள் சிவசக்திக்கு குழந்தைகள் போன்றும் கற்பனையான வடிவம் கொடுத்தும் வைத்துள்ளோம். இதனால், நாம் எளிதாக மனதில் இந்த உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்ய முடியும். ஆகவே, சிவபிரான், பராசக்தி, முருகன், விநாயகர் என்பது ஒரே பரம்பொருளைக் குறிக்கிறது. இந்த பரம்பொருளைத் தான் பதி என்று சைவ சிந்தாந்தம் குறிப்பிடுகிறது. இது அநாதியானது. அதாவது, பிறப்பு, இறப்பு, அழிவு என்று எதுவும் இல்லாதது.

 

நாமெல்லாம் யார் ?

அநாதியான இறைவனைப் போல, அநாதியாக இன்னும் இரண்டு பொருட்கள் உள்ளது. அது தான் எண்ணற்ற உருவமில்லாத உயிர்களும், தளை அல்லது பாசம் எனப்படும் அருவப் பொருளும் ஆகும். உயிர்களின் இயல்பு, அறிவு, இச்சை (விருப்பப்படுதல்), செயல் இந்த மூன்றும். உயிர்களுக்கு அறிவு உண்டு. அந்த அறிவு செயல்படாத வண்ணம், தளையாகிய ஆணவ மலம் மூடியிருக்கிறது. (ட்யூப் டேப்லட்டுக்குள் மருந்து இருப்பது போல்). உயிர்களின் அறிவை செயல்பட வைக்கவே, இறைவன் கருணை கொண்டு, அதற்கு தன்னுடைய மாயை என்ற சக்தியிலிருந்து இந்து உலகையும் பிரபஞ்சத்தையும் படைக்கிறான். (ஒரு நுண்ணிய விதைக்குள்ளிருந்து பெரிய ஆலமரம் முளைத்து வருவது போல், மாயை என்று அருவ நுண்பொருளில் இருந்து இந்த பிரபஞ்சம் விரிந்து வளர்ந்து வருகிறது.) நம்மை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி நம் அறிவை விளங்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துகிறான் இறைவன். பக்குவப்பட்ட உயிர்களுக்கு வீடுபேறு (முக்தி) அளித்து தடையற்ற பேரின்பத்தை வழங்குகிறான். இந்த அறிவு விளங்க விளங்க, நாம் இறைவனை அடையாளங் கொண்டு அவனுக்கு நன்றி உரைத்து, அவனைப் போற்றி வழிபட வேண்டும்.

 

திருமால், பிரம்மன், இந்திரன், அக்னி இவர்கள் எல்லாம் யார் ?

படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை இறைவன் செய்து, இந்த பிரபஞ்சத்தை இயக்கி, உயிர்களை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி அறிவை விளங்க வைக்கிறான். இந்த தொழில்கள் அனைத்தையும் அவனே செய்ய வல்லவனாயினும், உயிர்களுக்கு அறிவு விளங்குதற் பொருட்டு மேன்மை பெற்ற உயிர்களுக்கு இந்த தொழிலைச் செய்யும் தகுதியை வழங்கி அவற்றை உய்வடையச் செய்கிறான். திருமால், பிரம்மன் போன்ற அனைத்தும் இறைவன் கொடுத்துள்ள பதவியாகும். மேன்மை பெற்ற உயிர்கள் குறிப்பிட்ட காலம் வரை இந்த பதவி வகிக்கும்.

 

நாம் யாரை வணங்க வேண்டும் ?  யாரை வழிபாடு செய்ய வேண்டும் ?

வணங்குதல் என்பது நாம் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும் என்பதை முன்னமே பார்த்தோம். வழிபாடு என்பது இறைவனைப் போற்றித் துதிப்பது. நாம் அனைவரும் வழிபாடு செய்ய வேண்டியது அந்த ஒரேயொரு பரம்பொருளை மட்டும் தான். வேறு எவருக்கும் வழிபாடு செய்யப்படும் தகுதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் வணங்கலாம். அதாவது மரியாதை நிமித்தமாக, வரவேற்கும் நிமித்தமாக, நன்றி சொல்லும் நிமித்தமாக, வாழ்த்தும் நிமித்தமாக என்று இத்தனை பொருளிலும் நாம் யாரையும் வணங்கலாம். ஆனால் தொழுதல் மற்றும் வழிபாடு இறைவனாகிய பரம்பொருள் ஒருவனுக்கு மட்டுமே. நம் தாய் தந்தையர், நம் குலதெய்வம், நம் ஊரைக் காக்கும் சாமி, நம் ஆசிரியர், குரு என்று எவரையும் வணங்கிக் கொள்ளலாம்.

 

இதில் இன்னுமொரு பக்குவ நிலை உள்ளது. இது மிகவும் அளப்பரியது, நுட்பமானது. உயிர்களாகிய நமக்கு சிற்றறிவு சொந்தமாக இருந்தாலும், இறைவனாகிய பரம்பொருளின் உதவியினாலேயே நமக்கு உடல் கொடுக்கப்பட்டு, அதற்கு இயக்கமும் கொடுக்கப்பட்டு, அதனால் வரும் அறிவையும் நமக்கு இறைவனே உணர்த்தி நம்மை இயக்குகிறான். அதாவது, அந்த பரம்பொருள், நம்மோடு ஒன்றாகவும், உடனாகவும் நம் உயிரில் கலந்து இருக்கிறான். நம் உயிரில் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலனாது இறைவன் நமக்கு அளித்த கொடை. அல்லது அருள். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால், அது அந்த உயிர் செய்த வினைகளின் காரணமாக, இறைவன் அந்த உயிருக்கு அளித்த அருள். இதனாலேயே இறந்து போன எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பிய திருஞானசம்பந்தருக்கு பூம்பாவை இறைவனின் அருளாகத் தோன்றினாள். ஆகையாலே, அவளை மணக்கவும் மறுத்தார். இறைவனாகிய பரம்பொருள் எங்கும் வியாபித்திருப்பதால், வைகை ஆற்றில் கிடந்த உருண்டைக் கற்கள் அனைத்தும் திருஞானசம்பந்தருக்கு சிவலிங்கத் திருமேனியாய்த் தோன்றியது. அவர் ஆற்றைக் கடக்காமலேயே நின்று பதிகம் பாடினார். மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தின் மறைந்தது பார்முதல் பூதம் என்கிறார் திருமூலர்பிரான். அருவமான உயிர்களும், மூன்று மலங்களை உள்ளடக்கிய பாசமும் தவிர, மற்ற யாவும் சிவபிரானின் திருவருளால் உருவானது. அவை யாவும் சிவனின் திருவருள். அந்த ஞானிகளில் பக்குவ கண்களுக்கு அவை அனைத்தும் சிவபிரானின் அருளாகவும் சிவபிரானாகவுமே தோன்றும். அவர்கள் எங்கும் வியாபித்திருக்கும் சிவபிரானையே வணங்கித் தொழுவார்கள். சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்குவர்.

 

இனி வரும் நாட்களில் நாம் செய்ய வேண்டியது யாது ?

  1. இல்லறவாசிகள் இல்லற கடமைகள் அனைத்தும் சரியாக செய்ய வேண்டும்.
  2. தினமும் திருமுறை அறிந்துணர்ந்து ஓத வேண்டும்.
  3. திருமுறை மற்றும் சாத்திர நூற்களைக் கற்க வேண்டும்.
  4. சிவஞானத்தைத் தேட வேண்டும். தேடத் தேடஅது பிடிபடும். தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே என்பது திருமூலர் வாக்கு. சிவ சொற்பொழிவுகள் கேட்க வேண்டும். திருவிழாக்கள் பார்க்க வேண்டும்.
  5. சிவன் மீதும் சிவனடியார்கள் மீதும் மிகுந்த அன்பு கொள்ள வேண்டும். சிவனடியார்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்கள் கூட்டத்திலேயே இருக்க வேண்டும்.
  6. திருக்கோவில்களை சிவனாகவே எண்ணி தினமும் வழிபட வேண்டும்.
  7. சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்க வேண்டும். நம்மால் இயன்ற தொண்டுகளை, சிவன் கோவிலுக்கும் சிவனடியார்களுக்கும் செய்ய வேண்டும்.
  8. நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள். அவ்வாறு தமது வாழ்கையையே வழிபாடாக இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் நாயன்மார்கள். அவர்களின் வரலாற்றை படித்து அவர்களைப் போலவும் வாழ முயற்சி செய்ய வேண்டும். நம் சமயத்தைப் பாதுகாத்திட வேண்டும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை. 4/5 (1)

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை. திருமுறையே சைவநெறிக் கருவூலம். திருமுறையே வாழ்வியல் வெளிச்சம். திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம். 63 நாயன்மார்களே நம் குருமார்கள். “விதியினால் பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர்” – அரசர், மெய்ப்பொருள் நாயனார். சிவனொடு ஒப்ப தெய்வம் தேடினும் இல்லை – திருமூலர். “இறைவன் ஒருவனே” – சைவ சமயம். பிறப்பும் இறப்பும், முதலும் முடிவும் இல்லாதவன் சிவபெருமான் ஒருவனே.

Please rate this