திருமுறை அறிவோம் திருமுறைகளின் பெருமை துண்டறிக்கை 4.6/5 (5)

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

கோவிலுக்கு வருபவர்களுக்கும், வீடு வீடாக சென்று திருமுறையின் பெருமைகளை துண்டறிக்கையாக கொடுப்பதற்கும் ஒரு பக்க அறிக்கை இங்கே உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, பத்தோ, ஐம்பதோ, நூறோ, ஆயிரமோ, லட்சமோ, உங்கள் வசதிக்கேற்ப அச்சிட்டு அனைவருக்கும் கொடுக்கலாம். திருச்சிற்றம்பலம்.

திருமுறை அறிவோம் – ஒரு பக்க துண்டறிக்கை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/open?id=1IsGc106rkSFMYekel1trMGpshA5jzU7r

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

        கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.

       பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில: பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. பாலை நிலம் நெய்தல் ஆனது. தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. ஆண் பனை பெண் பனையாயிற்று. எலும்பு பெண்ணாகியது. விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. நரி குதிரையாகியது. முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. பிறவி ஊமை பேசியது. சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

       பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.

       பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம். திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

சைவ சமய சாத்திர நூல்கள்

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *