திருமுறை என்னும் தேன் – துளி 1 4.67/5 (3)

திருமுறை என்னும் தேன் – துளி 1 

பதிவு ஆசிரியர்: சிவதீபன்

திருமூலர் திருமந்திரம்

பத்தாம் திருமுறை – தூல பஞ்சாக்கரம்

குறிப்பு: அப்பரடிகள் இறைவனை கனியினும் இனியன் என்பார், இங்கு திருமூலர் இறைவனது நாமத்தின் சுவை கனி போன்றது என்று பாடுகிறார்

இறை இன்பம் என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் முடியும் என்பதனை விளக்கும் மந்திரம் இது

பாடல்

ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும்
ஒன்று கண் டீர் உலகுக்குயிராவது
நன்றுகண்டீர் இனி நமச்சிவாயப்பழம்
தின்றுகண்டேற்கு இது தித்தித்தவாறே .

பொருள்

அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?

சற்குருநார் குரலில் கேட்டின்புறுங்கள்🙏🏻😊

ஒன்று கண்டீர்


தில்லை வாழ்அந்தணர்கள்

(சிவதீபன்)

எனக்கும் நம் “அன்பு” அன்பு தம்பிக்கும் நண்பர் சிவக்குமார் அவர்களுக்கும் *தில்லைகூத்த பிரான் மீது எத்தனை ஈடுபாடோ அதே போலவே பெருமானுக்கு ஸ்ரீகாரியம் செய்யும் “தில்லைவாழ் அந்தணர்கள்” மீதும் ஈடுபாடு உண்டு*


இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் காட்சி கடந்த திருவாதிரை விழாவில் தேரோட்டத்தின் போது வடக்கு வீதியில் நாங்கள் கண்ட காட்சி!!

*கூட்டத்தின் இடையில் சைக்கிளை தீட்சிதர் ஒருவர் செலுத்த, பின்னால் கேரியரில் அவரது இல்லத்தரசி அமர்ந்திருந்தார்* மற்றவர்களுக்கு எப்படியோ எங்களை பொறுத்த வரை அது *சாட்சாத் நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரியும் சைக்கிள் ரைடு செய்ததை போல இருந்தது*

காட்சியை கண்டதும் நாங்கள் *இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்* இன்றைக்கு அது அன்பின் கரம் வழியே கூத்தனருளால் ஓவியமாக வெளிப்பட்டுள்ளது

நாங்கள் தில்லைக்கு சென்றால் நிருத்த தரிசனம் ஆனதும் எங்கள் கவனம் தீட்சிதர்கள் என்னென்ன செய்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பதுதான் வேலை!!

*கூத்தனை தொட்டு தடவி பூசிப்பவர்களாயிற்றே!! “பேற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார்” என்று பெரியபுராணமே பாடுகினன்ற வாழும் நாயன்மார்களான இவர்கள் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆச்சர்யப் படத்தக்கது அன்று*

“வழி!! வழி!!” என்று அதிகாரக்குரல் எடுத்து அவர்கள் வருங்காட்சியும், கூத்தபிரான் முன்பு குழந்தை போல உருகுங்காட்சியும், ஆச்சர்யமாக ஐந்தாம் நாள் தெருவடைச்சான் முன்பு அவர்கள் உலகை மறந்து ஆடிவருங் காட்சியும் சீரினால் வழிபாடுகளை ஒழியாமல் செய்யும் அர்ப்பணிப்பும் தமிழ் மொழிக்கும் திருமுறைகளுக்கும் தக்க வகையில் செய்யும் மரியாதைகளும் வெளியில் கண்டு வணங்கினால் எதிர்வணங்கும் பாங்கும் என இவர்களிடம் ஆச்சர்யப்பட ஏராளமான விஷயம் இருக்கிறது எங்களுக்கு

நாங்கள் *தீட்சிதர்களை பற்றி பேசி மகிழும் நேரங்களில் கண்டு பிடித்த விஷயம் ஒன்று உள்ளது!! அதுதான் “வயர்கூடை”, சபைக்கு அவர்கள் வரும்போது பெரும்பாலும் நைவேத்யங்கள் பூசைப்பொருட்களுடன் வருவார்கள், இப்படியெதுவும் இல்லாத தீட்சிதர் நிச்சயமாக ஒரு வயர்கூடயை வைத்திருப்பார்*

போகும்போது அதில் எதும் கொண்டு செல்வதையும் நாங்கள் கண்டிலோம் ஆயினும அவர்கள் கையில் வயர்கூடை வைத்திருப்பதை நாங்கள் பார்த்து இரசிப்போம் சிரிப்போம்

இந்த ஓவியத்தில் சைக்கிளில் அந்த வயர்கூடை மாட்டியிருப்பதை கண்டின்புறலாம்!!
மேலும் தீட்சிதர் வீட்டு பெண்களின் மங்கலகரமான அணியலங்காரங்கள் சாட்சாத் சிவகாமசுந்தரியை நினைவூட்டும், தமிழ் நாட்டில் பெண்களிடையை நிலவி வந்த மஞ்சள் பூசுதல் குஞ்சம் வைத்து சடை பின்னுதல் நெற்றி நிறைய குங்குமம் வைத்தல்  போன்ற வழக்கங்கள் எல்லாம் ஒருகாலத்தில் இருந்தது ஆனால் தற்போதும் இதனை தவறாமல் கடைபிடிக்கும் தெய்வீகமான பெண்களான இவர்கள் நிச்சயம் சந்தேகத்திற்கு இடமின்றி வணங்கத்தக்கவர்கள்,

அந்த குஞ்சம் வைத்த சடையினை இங்கு முன்னிட்டு காட்டியுள்ளார் அன்பு தம்பி

பின்னால் உள்ள நடராஜா பூக்கடை ஆலய கோபுரத்தின் வேலைபாடுகள் எல்லாம் அற்புதம்

தமிழக கோயில் கோபுரங்கள் அனைத்திலும் இல்லாத சிறப்பு தில்லை கோபுரங்கள் நான்கிலும் உண்டு கீழிருந்து எழும்பியுள்ள கோபுரத்தின் உச்சி கூடு ஓராள் இடைவெளிக்கு உள்வாங்கியது போல இருந்து அதற்கு மேல் குடை போல விரிந்திருக்கும்  இதனை படத்தில் அன்பு அழகாகக் காட்டியுள்ளார்

கண்டும் சிந்தித்தும் இன்புற இந்த ஓவியத்தில் ஏராளமான செய்திகள் பொதிந்துள்ளன.
ஏன்  கூத்தபிரானே பொதிந்துள்ளார் என்றாலும் மிகையில்லை

திருச்சிற்றம்பலம்.


கருவூர் திருவிசைப்பா

ஒன்பதாம் திருமுறை

குறிப்பு: ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள அதிகமான பதிகங்கள் கருவூர் தேவர் அருளியதாம்

பத்து திருவிசைப்பா பாடல்பெற்ற தலங்கள் இவர்தம் இசைப்பாக்களை பெற்றுள்ளன, *சித்தபுருசரான இவர் கயகல்பம் உண்டவராக தன்னை தம் பாடல்களில் குறிக்கிறார்*

தில்லை கோயில் மீது இவர் பாடிய பதிகத்தின் முதல் பாடல் இது

பண்: புறநீர்மை

பாடல்கள்

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்கு அறையணற் கட்செவிப் பகுவாய் பணம்விரி துத்திப்பொறி கொள்வெள் எயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின் மழைதவழ் வளரிளங் கமுகந்திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே.

பொருள்

கூட்டமாக விரிந்த தலைகளையும் அத்தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

சற்குருநாதர் குரலில் தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻😊

திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *