பன்னிரு திருமுறை சிவபெருமானின் திருவுருவம் 5/5 (3)

பன்னிரு திருமுறை சிவபிரானின் திருவுருவம்.

தனக்கென்று எந்த தேவையும் இல்லாத சிவபிரான், உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு இரங்கி, தன் மேலான நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருவம், உருவம், அருவுருவம் என்று பல்வேறு நிலைகளில் உயிர்களுக்கு அருள் புரிகிறான். வேண்டுபவர்க்கு வேண்டிய உருவில் வந்து அருளும் தன்மையன் நம் தலைவன். நாதத்திலிருந்து தோன்றும் ஒலியாக அந்த ஒலியே மந்திரமாகவும் வந்து அருளுவன். இறைவன் புக முடியாத இடம் உண்டோ ? இறைவன் எடுக்க முடியாத உருவம் உண்டோ ?
 
 
இறைவன் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மந்திர வடிவமாகவும் உள்ளான். பன்னிரு திருமுறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில்
 

    மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர்

    இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்

    பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்

    அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார்

என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார்.

திருக்கோவில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசனத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான்.

 
 
நியாசம் = வைப்பு,

பிரதிட்டை = நிலை பெறுத்துவித்தல்.

 
திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மைகளை,
 

    சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
    அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
    இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
    கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே
    

என்று ஒரு பழம்பாடல் எடுத்தியம்புகின்றது. ஆகவே, மந்திரமாகிய திருமுறைகளை தினமும் ஓதுவோம். நன்மையே என்றும் நம்மைச் சேரும். வாழ்கை இன்பமான வழியில் பயணிக்கும். திருவருள் கூடி நிற்கும்.
 
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
     தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
     செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
     எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
     மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *