மாகேசுர பூசையின் பெருமை

மாகேசுரர்கள் யார் ? மாகேசுர பூசை என்றால் என்ன ? 4.75/5 (4)

சிவமயம்

மாகேசுர பூசை என்றால் என்ன ?

மாகேசுர பூசை – பெயர் விளக்கம்
ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூசை மகேஸ்வர பூசை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மாகேசுரர் எனப்படுவர். அத்தகைய பெருமை உடைய மாகேசுரர்களுக்கு செய்யும் பூசை மாகேசுர பூசை.

மாகேசுர பூசையின் பெருமை
புண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மாகேசுர பூசை.
மாகேசுர பூசை எப்படி செய்யப்படுகிறது ?
மாகேசுர பூசையாவது, மாகேசுரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மாகேசுரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும். சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை வசதியான இடத்தில் அமரச் செய்து, பூசை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும்.  சிவதருமோத்தரம், “புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே.” அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.

இத்தனை பெரும் சிறப்பு பெற்றது மாகேசுர பூசை. இந்த மாகேசுர பூசையை தினம் தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மாகேசுர பூசை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர்புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரேஎன்று சிவனை  சிறிதும் நோகாமல் தொடர்ந்து மாகேசுர பூசை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையாளன் சிவபெருமான்.

உருத்திராக்கங்களை பல்வேறு அபிசேடங்கள் செய்து அதை இறைவனுக்கு ஆவாகனம் செய்யும் போது, சிவபெருமானே அதை ஏற்றுக்கொண்டு தன் அருளை வழங்குகிறார்.

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

மாகேசுர பூசையின் பெருமை

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *