திருச்சிற்றம்பலம்.
இறைவன் யார் ? நாம் யாரை வழிபாடு செய்யவேண்டும் ?
சமூக ஊடகங்களில் திகழும் பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியும், உள்ளதை உள்ளவாறு தெளிவுபடுத்தவும் முயலும் பதிவு இது.
ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் பாதமலரை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.
அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாதமலர்களை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.
மெய்கண்ட சாத்திரங்கள் கொடுத்தருளிய மெய்கண்டார் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.
நாம் யார், இறைவன் யார், நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, நாம் யாரை வணங்க வேண்டும் என்பதை தெளிவுற அறிவதற்கு முன்னர், சில வார்த்தைகளை தெளிவு பெற அறிந்து கொள்வது அவசியம்.
வணங்குதல் என்றால் என்ன ?
வணக்கம் என்ற சொல் தமிழில் பல பொருளைத் தரும் சொல்லாக விளங்குகிறது. பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றார் போல் அது வேறு வேறு பொருளைத் தரும். இது வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் என்று பல்வேறு பொருளைத் தருகிறது. ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வரும் போது, அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அது அவரை வரவேற்பதற்கு. இங்கு வணக்கம் வரவேற்பைக் குறிக்கிறது. ஒருவர் வீட்டில் விருந்து சாப்பிட்டு கிளம்பும் போது வணக்கம் சொல்கிறோம். அது நன்றியைத் தெரிவிக்கிறது. கோவிலில் கடவுளை வணங்குகிறோம். அது தொழுதலைக் குறிக்கிது. தெருவில் செல்லும் போது நண்பரைப் பார்க்கும் போது வணக்கம் சொல்கிறோம். அது வாழ்த்துதலைக் குறிக்கிறது. ஆகவே, வணங்குகிறோம் என்ற சொல் எந்த இடத்தில் எந்த அர்த்தம் கொடுக்கிறது என்பதை தெளிவாக உணர வேண்டும்.
வழிபாடு செய்தல் என்றால் என்ன ?
வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதாகும். இறைவனைப் பூசிப்பதாகும். இறைவனை எப்படித் தொழ வேண்டும் என்றும் திருக்கோவில் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் நம் ஆகமங்கங்கள் உரைக்கின்றன. இறைவனை வழிபடுவதற்குப் பல்வேறு நியம நியதிகள் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு குலத்தினர் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள். வழிபாடு இறைவனுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. செய்யப்பட வேண்டும்.
இறைவன் எத்தனை பேர் ? யாரெல்லாம் அவர்கள் ?
இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் தெளிவாக விளக்குகிறது. அவன் பாலுக்கு அப்பாற்பட்டவனாதலால், அவனைப் பரம்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஓர் உருவும், ஓர் நாமம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் பல்வேறு பெயர்களையும் உருவங்களையும் நாமே கொடுத்து வழிபடுகிறோம். பொதுவான அந்த பரம்பொருளை நாம் சிவபெருமான் என்ற பெயரைக் கொடுத்து நாம் மனதில் எண்ணுவதற்கு எளிதாக அதற்கு ஒரு இயல்பான உருவத்தையும் கொடுத்துக் கொண்டுள்ளோம். உருவமில்லாத அந்த பரம்பொருள் உயிர்களுக்கு உதவுவதற்கு வேண்டி, உயிர்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு உருவத்தைத் தானே எடுத்து தன்னை உயிர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறது. பிறப்பு இறப்பு இல்லாத அந்த பரம்பொருள் எல்லையற்ற சக்தியைக் கொண்டது. அந்த சக்தியைக் கொண்டு தான் பல்வேறு செயல்களைச் செய்கிறது. நாம் எளிதாக புரிவதற்கு வேண்டி, அந்த சக்திக்கு மனித பெண் உருவம் கொடுத்து பார்வதி, மீனாட்சி, காமாட்சி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் சூட்டி மகிழ்ந்து கொள்கிறோம். சில காரணங்களுக்காக சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்ட சக்தியை விநாயகர் என்றும், முருகப் பெருமான் என்றும், இவர்கள் சிவசக்திக்கு குழந்தைகள் போன்றும் கற்பனையான வடிவம் கொடுத்தும் வைத்துள்ளோம். இதனால், நாம் எளிதாக மனதில் இந்த உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்ய முடியும். ஆகவே, சிவபிரான், பராசக்தி, முருகன், விநாயகர் என்பது ஒரே பரம்பொருளைக் குறிக்கிறது. இந்த பரம்பொருளைத் தான் பதி என்று சைவ சிந்தாந்தம் குறிப்பிடுகிறது. இது அநாதியானது. அதாவது, பிறப்பு, இறப்பு, அழிவு என்று எதுவும் இல்லாதது.
நாமெல்லாம் யார் ?
அநாதியான இறைவனைப் போல, அநாதியாக இன்னும் இரண்டு பொருட்கள் உள்ளது. அது தான் எண்ணற்ற உருவமில்லாத உயிர்களும், தளை அல்லது பாசம் எனப்படும் அருவப் பொருளும் ஆகும். உயிர்களின் இயல்பு, அறிவு, இச்சை (விருப்பப்படுதல்), செயல் இந்த மூன்றும். உயிர்களுக்கு அறிவு உண்டு. அந்த அறிவு செயல்படாத வண்ணம், தளையாகிய ஆணவ மலம் மூடியிருக்கிறது. (ட்யூப் டேப்லட்டுக்குள் மருந்து இருப்பது போல்). உயிர்களின் அறிவை செயல்பட வைக்கவே, இறைவன் கருணை கொண்டு, அதற்கு தன்னுடைய மாயை என்ற சக்தியிலிருந்து இந்து உலகையும் பிரபஞ்சத்தையும் படைக்கிறான். (ஒரு நுண்ணிய விதைக்குள்ளிருந்து பெரிய ஆலமரம் முளைத்து வருவது போல், மாயை என்று அருவ நுண்பொருளில் இருந்து இந்த பிரபஞ்சம் விரிந்து வளர்ந்து வருகிறது.) நம்மை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி நம் அறிவை விளங்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துகிறான் இறைவன். பக்குவப்பட்ட உயிர்களுக்கு வீடுபேறு (முக்தி) அளித்து தடையற்ற பேரின்பத்தை வழங்குகிறான். இந்த அறிவு விளங்க விளங்க, நாம் இறைவனை அடையாளங் கொண்டு அவனுக்கு நன்றி உரைத்து, அவனைப் போற்றி வழிபட வேண்டும்.
திருமால், பிரம்மன், இந்திரன், அக்னி இவர்கள் எல்லாம் யார் ?
படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை இறைவன் செய்து, இந்த பிரபஞ்சத்தை இயக்கி, உயிர்களை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி அறிவை விளங்க வைக்கிறான். இந்த தொழில்கள் அனைத்தையும் அவனே செய்ய வல்லவனாயினும், உயிர்களுக்கு அறிவு விளங்குதற் பொருட்டு மேன்மை பெற்ற உயிர்களுக்கு இந்த தொழிலைச் செய்யும் தகுதியை வழங்கி அவற்றை உய்வடையச் செய்கிறான். திருமால், பிரம்மன் போன்ற அனைத்தும் இறைவன் கொடுத்துள்ள பதவியாகும். மேன்மை பெற்ற உயிர்கள் குறிப்பிட்ட காலம் வரை இந்த பதவி வகிக்கும்.
நாம் யாரை வணங்க வேண்டும் ? யாரை வழிபாடு செய்ய வேண்டும் ?
வணங்குதல் என்பது நாம் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும் என்பதை முன்னமே பார்த்தோம். வழிபாடு என்பது இறைவனைப் போற்றித் துதிப்பது. நாம் அனைவரும் வழிபாடு செய்ய வேண்டியது அந்த ஒரேயொரு பரம்பொருளை மட்டும் தான். வேறு எவருக்கும் வழிபாடு செய்யப்படும் தகுதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் வணங்கலாம். அதாவது மரியாதை நிமித்தமாக, வரவேற்கும் நிமித்தமாக, நன்றி சொல்லும் நிமித்தமாக, வாழ்த்தும் நிமித்தமாக என்று இத்தனை பொருளிலும் நாம் யாரையும் வணங்கலாம். ஆனால் தொழுதல் மற்றும் வழிபாடு இறைவனாகிய பரம்பொருள் ஒருவனுக்கு மட்டுமே. நம் தாய் தந்தையர், நம் குலதெய்வம், நம் ஊரைக் காக்கும் சாமி, நம் ஆசிரியர், குரு என்று எவரையும் வணங்கிக் கொள்ளலாம்.
இதில் இன்னுமொரு பக்குவ நிலை உள்ளது. இது மிகவும் அளப்பரியது, நுட்பமானது. உயிர்களாகிய நமக்கு சிற்றறிவு சொந்தமாக இருந்தாலும், இறைவனாகிய பரம்பொருளின் உதவியினாலேயே நமக்கு உடல் கொடுக்கப்பட்டு, அதற்கு இயக்கமும் கொடுக்கப்பட்டு, அதனால் வரும் அறிவையும் நமக்கு இறைவனே உணர்த்தி நம்மை இயக்குகிறான். அதாவது, அந்த பரம்பொருள், நம்மோடு ஒன்றாகவும், உடனாகவும் நம் உயிரில் கலந்து இருக்கிறான். நம் உயிரில் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலனாது இறைவன் நமக்கு அளித்த கொடை. அல்லது அருள். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால், அது அந்த உயிர் செய்த வினைகளின் காரணமாக, இறைவன் அந்த உயிருக்கு அளித்த அருள். இதனாலேயே இறந்து போன எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பிய திருஞானசம்பந்தருக்கு பூம்பாவை இறைவனின் அருளாகத் தோன்றினாள். ஆகையாலே, அவளை மணக்கவும் மறுத்தார். இறைவனாகிய பரம்பொருள் எங்கும் வியாபித்திருப்பதால், வைகை ஆற்றில் கிடந்த உருண்டைக் கற்கள் அனைத்தும் திருஞானசம்பந்தருக்கு சிவலிங்கத் திருமேனியாய்த் தோன்றியது. அவர் ஆற்றைக் கடக்காமலேயே நின்று பதிகம் பாடினார். மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தின் மறைந்தது பார்முதல் பூதம் என்கிறார் திருமூலர்பிரான். அருவமான உயிர்களும், மூன்று மலங்களை உள்ளடக்கிய பாசமும் தவிர, மற்ற யாவும் சிவபிரானின் திருவருளால் உருவானது. அவை யாவும் சிவனின் திருவருள். அந்த ஞானிகளில் பக்குவ கண்களுக்கு அவை அனைத்தும் சிவபிரானின் அருளாகவும் சிவபிரானாகவுமே தோன்றும். அவர்கள் எங்கும் வியாபித்திருக்கும் சிவபிரானையே வணங்கித் தொழுவார்கள். சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்குவர்.
இனி வரும் நாட்களில் நாம் செய்ய வேண்டியது யாது ?
- இல்லறவாசிகள் இல்லற கடமைகள் அனைத்தும் சரியாக செய்ய வேண்டும்.
- தினமும் திருமுறை அறிந்துணர்ந்து ஓத வேண்டும்.
- திருமுறை மற்றும் சாத்திர நூற்களைக் கற்க வேண்டும்.
- சிவஞானத்தைத் தேட வேண்டும். தேடத் தேடஅது பிடிபடும். தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே என்பது திருமூலர் வாக்கு. சிவ சொற்பொழிவுகள் கேட்க வேண்டும். திருவிழாக்கள் பார்க்க வேண்டும்.
- சிவன் மீதும் சிவனடியார்கள் மீதும் மிகுந்த அன்பு கொள்ள வேண்டும். சிவனடியார்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்கள் கூட்டத்திலேயே இருக்க வேண்டும்.
- திருக்கோவில்களை சிவனாகவே எண்ணி தினமும் வழிபட வேண்டும்.
- சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்க வேண்டும். நம்மால் இயன்ற தொண்டுகளை, சிவன் கோவிலுக்கும் சிவனடியார்களுக்கும் செய்ய வேண்டும்.
- நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள். அவ்வாறு தமது வாழ்கையையே வழிபாடாக இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் நாயன்மார்கள். அவர்களின் வரலாற்றை படித்து அவர்களைப் போலவும் வாழ முயற்சி செய்ய வேண்டும். நம் சமயத்தைப் பாதுகாத்திட வேண்டும்.
உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருச்சிற்றம்பலம்.
fantastic app