வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா ? சிவபெருமானை வணங்குங்கள்
சகல அண்ட புவனங்களையும் தன்னுள் கொண்டு காத்தருளும், தனக்கு நிகரற்ற தெய்வம் சிவபெருமானின் ஆணையின் கீழ், அனைத்துலகும் இயங்கி வருகிறது. எல்லா உயிர்க்குத் தேவையானவற்றையும், பொருளையும், இன்பத்தையும் தன் அளப்பரிய கருணையினால் தக்க சமயத்தில் கொடுத்து அருள எல்லா ஆலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவம் நம்மை உய்விக்கும் தெய்வம். ஆணவத்தை வேற்றுத்து நிகரற்ற பேரின்பத்தை எப்போதும் வழங்கும் தன்மையுடைய ஒரே கருணை தெய்வம் சிவபெருமான். திக்குத் தெரியாமல் தவித்துப் புலம்பும் எல்லா உயிர்களுக்கும் தெப்பமாக தானே வந்து காத்தருளி நம்மை உய்விக்கிறான். அவ்வாறு இவ்வுலக உயிர்களுக்கு வாழ்விற்க்குத் தேவையான செல்வங்கள் அனைத்தையும் மகாலட்சுமிக்கு அருளி, செல்வத்திற்கெல்லாம் தெய்வமாக அவளை நியமித்தருளினார். மகாலட்சுமி சிவபெருமானின் திருவருளால் எட்டு சக்திகளைப் பெற்றார். தனம், தான்யம், சந்தானம் உள்ளடக்கிய எட்டு சக்திகளையும் சங்கநிதி பதுமநிதி என இருவரிடம் ஒப்படைத்தார். இந்த செல்வங்கள் யாவையும் கணக்கு பார்த்து தேவையான செல்வத்தை தேவையானவர்களுக்கு வழங்க ஒருவர் வந்து சேர்ந்தார். அவரே குபேரன்.
குபேரன் யார் ?
திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்க்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் சொல்கிறது. சிவபிரானுக்கு இரண்டு நெருங்கிய தோழர்கள். ஒன்று சுந்தரமூர்த்தி நாயனார். இன்னொருவர் குபேரன். பிரம்மாவின் மனதில் தோன்றியவர் புலஸ்தியர். இவருடைய பிள்ளைகள் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பநகை, வீபீஷணன் மற்றும் குபேரன். குபேரனும் இராவணனும் சிறந்த சிவபக்தர்கள். குபேரன் சிவபிரானிடம் தவம் செய்து அருள் பெற்றார். மேலும் வடக்கு திசைக்கு உரிய அதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இந்த குபேரனிடம் தான் மகாலட்சுமி தான் சிவபெருமானிடம் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். குபேரன் அரசாட்சி செய்ய அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பி விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அதில் ஓர் அதிசய அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி மீன் ஆசனத்தில் போடப்பட்ட மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினார். கிரீடம், தங்க ஆபரணங்கள் அணிந்து முத்துக் குடையின் கீழ் அமர்ந்து கையில் அபய முத்திரை காட்டுகிறார். யார் யாருக்கு என்ன செல்வம் போய்ச் சேர வேண்டுமோ, அவற்றை சரியாக சமர்பிப்பதே இவர் வேலை. மேலும் பாவங்கள் செய்யாதிருப்பவர்களை கோடீஸ்வரானாக்குவதும் இவரது பணியாகும். இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும் இடதுபுறத்தில் பதுமநிதியும் அமர்ந்து உதவிபுரிவார்கள்.
சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர். இவரது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்களாகும்.
குபேரனின் உருவ அமைப்பு
குபேரன், சிறுத்த சிவந்த உருவமும் பருத்த வடிவமும் கொண்டவர். இவரது துணைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து முத்துக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சிம்மாசனம் தாமரை மலர் மீது மீனாசனம் அமைத்து அதன் மேல் மெத்தை விரிக்கப்பட்டிருக்கும்.அவர் காலின் கீழ் அவரது வாகனமான குதிரை இருக்கும்.
குபேரனின் ஒரு கை அபயமுத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகும் என்பார்கள்.
அவர் தன் வாய் வழியே ரத்தினங்களை உமிழ்ந்து செல்வதாலேயே இது நடைபெறுகிறது. குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும் இடப்புறத்தில் பது மநிதியும் வீற்றிருக்கிறார்கள். கீழே உள்ள பாத்திரங்களில் நவரத்தினக் குவியல்கள் காணப்படும். அதோடு குபேர யந்திரத்துடன் குபேரன் காட்சியளிக்கிறார்.
குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர். குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுச் சென்று கொண்டிருந்தான். ஒரு முறை காவேரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகைமை கணங்களைக் காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன.
ஆகா, இந்த ஊர் எவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்தான். அவ்வளவு தான், அந்த விருப்பத்தை நிறைவேற்ற சிவபெருமானார் அவருக்கு ஒரு பிறவி கொடுத்து விட்டார். அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வெளியே எடுத்து முறையாக நீ என்னை வழி பட்டா யானால், உனக்கு அளவிலாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும் என்றவாறே சிவபெருமான் திடீரென குபேரன் முன் தோன்றினார்.
ஈசன் கூறியவாறே குபேரனும் அவரை வெளியே எடுத்து வழிபாடு செய்தான். தன் பெயர் அளகேசன் என்ற நாமம் கொண்டு விளங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டான். சிவனும் சம்மதித்தார். குபேரன் வழிபட்ட அந்தச் சிவன் கோவில் பவானியில் உள்ளது. அது பவானி சங்கமேஸ்வரர் கோவில். எனவே தீபாவளியன்று இத்தலத்தில் வழிபட்டால் அளவற்ற செல்வமும் அருளும் பெறலாம்.
ஆகவே, குபேரனை எண்ணத்தில் கொண்டு சிவபெருமானை தினம் வணங்கி வந்தால் உங்கள் இல்லத்தில் செல்வம் கொழிக்கும். புதிய வீடு, வாகனம் பெறுவீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வறுமையும் தரித்திரியமும் தெறித்து காணாமல் ஓடி விடும். கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் சிவபிரான். இந்த பிறவியில் செழித்து வாழ நல்ல செல்வமும் மறுபிறவி வேண்டாதவர்க்கு பிறவிப் பிணியை நீக்கி பேரின்ப முக்தியும் கொடுத்து அருளுவார். சிவபிரான் மீது அன்பு கொண்டு அவர் திருவடியை இறுக பற்றிக் கொள்ளுங்கள். ஓம் நமசிவாய.